Thiruppugazh – 245

Thiruchengattangudi – Sindhu Bhairavi – Chathusra dhruva kanda nadai

தந்தான தானதன தானதன தானதன
     தந்தான தானதன தானதன தானதன
          தந்தான தானதன தானதன தானதன …… தனதான

……… பாடல் ………

வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
     கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
          வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் …… மலர்போல

மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
     கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
          வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய …… லிடுமாதர்

சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
     சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
          சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ …… னுழலாமற்

சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
     வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது
          தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் …… புரிவாயே

சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
     கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
          சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென …… விருதோதை

சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
     கங்காள வேணிகுரு வானவந மோநமென
          திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு …… முருகோனே

இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
     பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
          யின்பான தேனிரச மார்முலைவி டாதகர …… மணிமார்பா

எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
     செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ
          டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய … மார்பில்
அணிந்துள்ள பொன்மாலையுடன் உயர்ந்த மார்பகங்களும் அசைய,

கொந்தார மாலை குழல் ஆரமொடு தோள்புரள … மலர்க்
கொத்துக்கள் நிறைந்த மாலை அணிந்த கூந்தலும் மணிமாலையும்
தோளில் புரண்டு அசைய,

வண்காதில் ஓலைகதிர் போலவொளி வீச … வளமான காதில்
காதணி சூரிய ஒளி போன்ற ஒளியை வீச,

இதழ் மலர்போல … உதடுகள் குமுத மலர் போல் விளங்க,

மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள் … மேகத்தில்
தோன்றும் வானவில் போன்ற நெற்றி, வாளையும் வேலையும் போன்ற
கண்கள், இவற்றுடன்

கொஞ்சார மோககிளி யாகநகை பேசி … கொஞ்சுதல் மிக்க
ஆசைக் கிளி போன்று சிரித்துப் பேசி,

உற வந்தாரை வாரும் இரு(ம்) நீர் உறவென … நெருங்கி
வந்தவர்களை வாரும், இங்கே இரும், நீர் நமக்கு உறவினர் ஆயிற்றே,
என்றெல்லாம்

ஆசைமயல் இடுமாதர் … ஆசை மயக்கத்தை ஊட்டுகின்ற பொது
மாதர்கள்,

சங்காளர் சூதுகொலைகாரர்குடி கேடர் … கூடிக் களிப்பவர்கள்,
சூதாடிகள், கொலையும் செய்யும் குணத்தினர், குடியைக் கெடுப்பவர்கள்,

சுழல் சிங்கார தோளர் பண ஆசையுளர் சாதியிலர் சண்டாளர் …
திரிகின்றவர்கள், அலங்காரத் தோளினர், பண ஆசையுள்ளவர்கள்,
சாதிபேதம் கவனிக்காது பலருடனும் கூடுபவர், இழிகுலத்தவர்,

சீசியவர் மாயவலையோடு அடியென்உழலாமல் … சீ, சீ,
இத்தகையோரது மாயவலையில் அடியேன் சிக்கி அலையாமல்,

சங்கோதை நாதமொடு கூடி … யோகவழியில் கிடைக்கும்
தசநாதங்களாகிய* ஓசையை அனுபவித்து அதனோடு கலந்து,

வெகு மாயையிருள் வெந்தோட … மிக்க மாயையாம் இருள் வெந்து
அழிந்து போக,

மூலஅழல் வீச உபதேசமது தண்காதிலோதி … மூலாக்கினி
வீசிட, உபதேசத்தை என் குளிர்ந்த காதில் ஓதி,

இரு பாதமலர் சேரஅருள் புரிவாயே … உன் இரண்டு பாதமலரைச்
சேரும்படியான திருவருளைத் தந்தருள்க.

சிங்கார ரூபமயில் வாகனநமோநமென … அலங்கார
உருவத்தனே, மயில் வாகனனே, போற்றி, போற்றி, என்று

கந்தாகுமாரசிவ தேசிகநமோநமென … கந்தனே, குமரனே,
குருநாதனே, போற்றி, போற்றி, என்று

சிந்தூர பார்வதி சுதாகரநமோநமென … குங்குமம் அணிந்த
பார்வதியின் பிள்ளையாய் அமைந்தவனே போற்றி, போற்றி, என்று

விருதோதை சிந்தான சோதிகதிர் வேலவநமோநமென …
வெற்றிச் சின்னங்களின் ஓசைகள் கடல் போல முழங்க ஜோதி ரூபம்
கொண்ட வேலாயுதனே போற்றி, போற்றி, என்று

கங்காள வேணிகுருவானவ நமோநமென … எலும்பு மாலைகளை
அணிந்தவரும், ஜடாமுடி உடையவருமான சிவபிரானுக்கு குருநாதன்
ஆனவனே போற்றி, போற்றி, என்று முழங்கவும்,

திண்சூரர் ஆழிமலை தூள்பட வை வேலைவிடு முருகோனே …
வலிமை மிக்க சூரன் முதலியவரையும், கடலையும், கிரெளஞ்ச
மலையையும் பொடியாகும்படி கூரிய வேலைச் செலுத்திய முருகனே.

இங்கீத வேதபிரமாவை விழ மோதி … இனிமை வாய்ந்த வேதம்
பயின்ற பிரமன் விழும்படியாக மோதியும்,

ஒரு பெண்காதலோடு வன மேவி வளிநாயகியை … ஒப்பற்ற
பெண்ணாகிய வள்ளிமேல் காதலோடு அவள் வசித்த காட்டிற்குச்
சென்று அந்த வள்ளிநாயகியின்

இன்பான தேனிரச மார்முலைவிடாதகர மணிமார்பா …
இன்பம் நிறைந்த, தேனைப் போல் இனிமையான மார்பினைவிட்டு
நீங்காத கரதலமும் அழகிய மார்பும் உடையவனே,

எண் தோளர் காதல்கொடு காதல்கறியேபருகு … எட்டுத்
தோள்களை உடைய சிவபிரான் ஆசையுடனே பிள்ளைக்கறியை
உண்ணப்புகுந்த**

செங்காடு மேவிபிரகாசமயில் மேலழகொடு …
திருச்செங்காட்டங்குடி*** என்னும் தலத்தைச் சார்ந்து, ஒளிவீசும்
மயில் மீது அழகோடு அமர்ந்து,

என்காதல் மாலைமுடி ஆறுமுகவா … எனது ஆசையால் எழுந்த
இந்தத் தமிழ் மாலையைப் புனைந்தருளும் ஆறுமுகனே,

அமரர் பெருமாளே. … தேவர்களின் பெருமாளே.

Leave a Reply